"அத்தனைக்கும் ஆசைப்படு" - கார்ப்பரேட் முதலாளித்துவ கோட்பாடு


2000 ஆம் ஆண்டு வாக்கில் முளைத்தெழுந்த கார்ப்பரேட் சாமியார்கள் சிலர் தங்களுக்கென்று தனித்த ஸ்லோகங்கள் சிலவற்றை சொன்னார்கள். அதை தலைப்பாக கொண்டு வார இதழ்களில் எழுதவும் செய்தார்கள். அப்படி எழுதப்பட்ட தொடர்களில் ஒன்றுதான் “அத்தனைக்கும் ஆசைப்படு”. 

இன்று புகழ்பெற்ற கார்ப்பரேட் சாமியாராக அறியப்படும் ஜக்கி, ஆனந்த விகடனில் எழுதிய தொடர் இது. 

ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் புத்தர்.

அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார் ஜக்கி.

இவை இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன? ஏன் இவ்வாறு முரண்பாடாக சொல்லப்படுகிறது..?

ஜக்கி இந்த வாசகத்தை சொல்வதற்கு முன்பு வரை ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்பதுதான் பிரதானமான ஒரு கருத்தாக இருந்தது. அதற்கு காரணம் இருக்கிறது. புத்தர் காலம் தொட்டு கடந்த சில பத்து ஆண்டுகள் முன்புவரை நாம் உற்பத்தியில் தன்னிறைவை அடைந்ததில்லை. சராசரி மனித வாழ்வு என்பது பற்றாக்குறையோடு வாழ்வதாகவே இருந்தது. மூன்று நேரமும் முழு வயிறும் சாப்பிடுவது என்பதே பலருக்கும் கற்பனையான ஒன்றுதான்.

பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்கு விரதம் இருப்பதை ஒரு திட்டமாக வகுத்துக் கொண்டனர். விரதம் நோன்பு இவை எல்லா சமூகங்களிலும் எல்லா மதங்களிலும் இன்றுவரை ஒரு மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

குறைந்த நுகர்வு (Low Consumption) அதாவது தன் ஆசைகளையும் தேவைகளையும் சுருக்கிக் கொள்வதை துறவு என்றனர்.

அவ்வாறு துறவு மேற்கொண்டவர்களை சமூகம் போற்றிப் புகழ்ந்தது. திருவள்ளுவர் நீத்தார் பெருமை என்று மூன்றாவது அதிகாரத்தில் பத்து குறள்களை இயற்றியிருக்கிறார். மீண்டும் துறவின் பெருமையை வலியுறுத்தி 34 வது அதிகாரம் துறவு என்றே இயற்றியிருக்கிறார். அந்த அளவிற்கு துறவு முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக கருதப்பட்டிருக்கிறது.

உற்பத்தி குறைந்த உலகத்தில் தேவைகளை சுருக்கி கொண்டவர்கள் சிறப்புக்குரியவர்களாகவும், ஆசைகளை குறைத்துக் கொள்வது சிறந்த ஒழுக்கமாகவும் கருதப்பட்டது. அதனால்தான் “ஆசையே துன்பத்திற்கு காரணம்” என்று புத்தர் போதித்தார். ஆனால் இன்றைய முதலாளித்துவ உலகில், உற்பத்தியும் நுகர்வும் பரவலாக்கப்பட்டுள்ளது.

என்னிடம் முன் எப்போதையும் விட இப்போது கையில்  கொஞ்சம் பணம் சேர்ந்து இருக்கிறது, சந்தையில் விற்பனைக்கான பொருட்களும் காத்திருக்கின்றன, நான் ஆசைப்படுகிறேன். இந்த ஆசை நியாயமானதா? அல்லது எல்லை மீறியதா? என்ற கேள்வி ஒருபுறம், ஆசை துன்பத்தைத்தானே கொண்டு வந்து சேர்க்கும், இதை புத்தரே சொல்லி இருக்கிறாரே என்ற சிந்தனை ஒருபுறம். ஒரு வாடிக்கையாளனான என்னை குழப்புகின்றன. 

எனது நுகர்வு வேட்கைக்கு தத்துவம் ஒரு தடையாக இருக்கிறது. பொருட்களை வாங்கி விட்ட பின்னும், நாம் அகலக்கால் வைத்து விட்டோமோ..! என்று சிந்திக்க வைத்து ஆசை குறித்த புத்தரின் தத்துவம் என்னை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகிறது.

இங்குதான் ஜக்கி வருகிறார், “அத்தனைக்கும் ஆசைப்படு” அது உன் உரிமை என்கிறார். நீ பொருட்களை வாங்கிக் குவிப்பதில் எந்த குற்றமும் இல்லை என்கிறார். 

ஜக்கியின் இந்த வாசகம் பிறப்பதற்கு முன், நம் கையில் கொஞ்சம் பணமும், சந்தையில் ஏராளமான பொருட்களும் வந்து குவிந்து கிடப்பதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. நீண்ட நெடிய மாற்றத்திற்குப் பின்பு தான் இறுதியில் இந்த தத்துவம் வந்து சேர்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தோன்றிய தொழில் புரட்சி உலகெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1769 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் வாட் கண்டுபிடித்த நீராவி இயந்திரம் உற்பத்தி துறையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவரை கைகளால், மனித உழைப்பால் நடந்து வந்த உற்பத்தி முறை, இயந்திர உற்பத்தியாக மாற்றம் பெற்றது. அதில் துணிகளின் உற்பத்தி தான் பிரதானமானது. துணிகளை சந்தை படுத்தவும் தங்களது உற்பத்தி இயந்திரங்களுக்கு மூலப் பொருட்களை தேடியும் வெள்ளையர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு சென்றனர். பின் அங்கு ஆட்சிகளை கைப்பற்றினர். தாங்கள் உற்பத்தி செய்த ஆடைகளை எல்லாம் தங்களது காலனி நாடுகளில் வலிந்து சந்தைப்படுத்தினர். இந்த அந்நிய துணிகள், மற்றும் பொருட்களை வாங்கக்கூடாது என்று காங்கிரஸும் காந்தியும் சுதேசி இயக்கத்தை நடத்தினர். இது மேலோட்டமாக பார்த்தால் இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையிலான யுத்தம் போல தோன்றும். உண்மையில் பழைய உற்பத்தி முறைக்கும் நவீன உற்பத்தி முறைக்கும் இடையிலான யுத்தம் தான் அது. 

நவீன எந்திர உற்பத்திக்கு முன்னால் எளிய கைத்தறி உற்பத்தி முறை தோற்றுப் போனது. இன்று திருப்பூர், கோவை போன்ற பகுதிகளில் எந்திரங்களை கொண்டு ஏராளமான ஆடைகளை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் அளவிற்கு நாம் நவீன உற்பத்தி முறையோடு ஒன்றிப் போய்விட்டோம்.

நவீன உற்பத்தி முறையோடு நாம் ஒத்துப் போகாமல் போயிருந்தால், காந்தி மட்டுமல்ல இந்தியாவே இன்று அவரை போல் கோவணம் தான் கட்டிக் கொண்டு இருந்திருக்கும். இந்தியாவின் கடந்த கால நிலையும் அதுதான். 

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பும் கூட முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முற்றிலுமாக நாம் மாறிவிடவில்லை.

படிப்படியான வளர்ச்சியில், உலகமயமாக்கலின் தாக்கத்தில் இன்று எல்லாம் எந்திரமயமாகிவிட்டது. துணி வகைகள் மட்டுமல்ல, சிறு குண்டூசியிலிருந்து மாபெரும்  எந்திரங்கள் வரை அனைத்துமே இங்கு தேவைக்கு அதிகமாகவே உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு வருகின்றன. 

இதனால் உருவாகியிருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் குறிப்பிட்ட அளவு, மக்களிடம் வாங்கும் திறனை மேம்படுத்தி இருக்கிறது. அதை இன்னும் அதிகப்படுத்த வங்கிகள் கடனையும், கடன் அட்டைகளையும் தருவதற்கு தயாராக காத்திருக்கின்றன.

கையில் இருக்கின்ற காசுக்கு பொருட்களை வாங்கிய காலம் போய்,
எவ்வளவு கடன் கிடைக்குமோ அவ்வளவுக்கு  பொருளை வாங்கலாம், இப்போது வாங்கிவிட்டு அடுத்த மாதம் பணம் செலுத்திக் கொள்ளலாம், அல்லது தவணை முறையில் கட்டலாம்..!! என்றெல்லாம் விதவிதமான வாய்ப்புகள் முன்வைக்கப்படுகின்றன.


தேவைக்காக ஒரு பொருளை வாங்குகின்ற காலம் மாறி, அடையாளத்திற்காகவாவது ஒரு காரையோ, அல்லது வீட்டு உபயோகப் பொருட்களையோ வாங்கி வைக்கின்ற காலத்திற்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம். 

இது ஒரு சமூக அந்தஸ்தாக, பெருமிதமாக கருதப்படுகிறது.
இங்குதான் ஜக்கி வந்து நிற்கிறார்..! அத்தனைக்கும் ஆசைப்படுங்கள் என்கிறார்.

ஆன்மீகவாதிகள் என்றால் துறவிகள், சன்னியாசிகள் தங்களது தேவைகளை சுருக்கி கொண்டவர்கள் என்கின்ற அடையாளங்களை புறந்தள்ளி விட்டு, தானே ஒரு முன்மாதிரியாக ஆடம்பர கார்கள், விலை உயர்ந்த ஆடைகள் என இந்த கார்ப்பரேட் உலகத்தின் விளம்பர மாடலாக வந்து காட்சியளிக்கிறார் ஜக்கி.

அவர் கூறுவது போல், அத்தனைக்கும் ஆசைப்பட்டால் என்னவாகும்..? 
தகுதிக்கு மீறிய பொருட்களை, அல்லது வீட்டை வாங்கி விடுவோம், அந்த கடனை அடைக்க முடியாமல் அதற்குள் சிக்கிக் கொள்வோம்…!

உத்தரவாதமான வேலை, உரிய சம்பளம், என்று இல்லாத தனியார் துறைகளில், எந்த நேரமும் வேலை பறி போகலாம் என்ற அபாயத்தில், நாம் வாங்கித் தொலைத்த கடன்கள் நம் மன உளைச்சலை அதிகப்படுத்தும்..!

அப்போது ஜக்கியோ, அல்லது வேறொரு சாமியாரோ வந்து மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று நமக்கு மூச்சு விட கற்றுத் தருவார்.  அதுவும் நம்மிடமிருந்து காசை வாங்கிக் கொண்டு.

அடியில் எரிந்து கொண்டிருக்கும் கடன் என்கிற கொள்ளியை பிடுங்காமல், உங்களுக்குள் குளிர்ச்சியை உணருங்கள் என்று கற்பனை செய்ய கற்றுத் தருவார்கள்.

எவ்வளவு நாள் தான் நீங்கள் வலிக்காதது போலவே நடிப்பது..?

நாம் ஒரு பெரும் சூழ்ச்சி வலையில் சிக்கி இருக்கிறோம் என்பது புரிய வரும் போது பெரும்பாலோருக்கு வாழ்க்கையே முடிந்து போயிருக்கும்.
சிலர் இது புரியாமலேயே கூட வாழ்ந்து முடித்திருப்பர்.



Post a Comment

உங்களுக்குத் தோன்றுவதை சொல்லிவிடுங்கள் Please . . .

أحدث أقدم